11ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 14ஆம் திகதி தொடக்கம் மார்ச் 29ஆம் திகதிவரை அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெறவுள்ளது. அதையொட்டி ‘உலகக் கிண்ணக் கிரிக்கெட்’ தொடர்பான கடந்த கால - தற்காலப் பதிவுகள் குறித்த அலசல்
4
ஆறாவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் 1996ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி முதல் மார்ச் 17ஆம் திகதி வரை இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நடைபெற்றது.
இத்தொடரில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து, இலங்கை, சிம்பாப்வே ஆகியவற்றுடன்
நேரடித் தேர்வு அந்தஸ்துப் பெறாத ஐக்கிய அரபு இராச்சியம், கென்யா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளும் பங்கேற்றமையால் அணிகளின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்தது.
12 அணிகளும் தலா 6 அணிகள் வீதம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோதும் வகையில் அட்டவணை வகுக்கப்பட்டது.
பின்னர் ஒவ்வொரு பிரிவிலும் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்குத் தகுதிபெற்றன (அட்டவணை தரப்பட்டுள்ளது).
அதன்படி (அட்டவணையை பார்க்க) காலிறுதியாட்டங்களில் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பிடித்த இலங்கை அணியும் ‘பி’ பிரிவில் நான்காம் இடம் பிடித்த இங்கிலாந்தும் மோதின.
அதேபோல ‘ஏ’ பிரிவில் இரண்டாவது இடம்பிடித்த அவுஸ்திரேலிய அணியும் ‘பி’ பிரிவில் மூன்றாவது இடம் பிடித்த நியூஸிலாந்தும் மோதின.
‘ஏ’ பிரிவில் மூன்றாவது இடம்பிடித்த இந்தியாவும் ‘பி’ பிரிவில் இரண்டாவது இடம்பிடித்த பாகிஸ்தானும் மோதின,
அதேபோல, ‘ஏ’ பிரிவில் நான்காவது இடம் பிடித்த மேற்கிந்தியத் தீவுகள் அணியும் ‘பி’ பிரிவில் முதலாவது இடம்பிடித்த தென்னாபிரிக்காவும் மோதின.
காலிறுதியாட்டங்களின் முடிவில் இலங்கை - இந்தியா அணிகளுக்கிடையில் முதலாவது அரையிறுதியாட்டம் நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 251 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்கு ஆடிய இந்திய அணி 34.1 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ஓட்டங்களையே சேர்த்திருந்தது. இதனால் இந்தியாவின் தோல்வி நெருங்க நெருங்க இந்திய ரசிகர்கள் குழப்பம் விளைவித்தனர். இதனால் தொடர்ந்து ஆட்டம் நடைபெறாமையால் இலங்கை அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மற்றொரு அரையிறுதியாட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்று இறுதியாட்டத்துக்குத் தகுதிபெற்றது.
இறுதியாட்டத்துக்கு முதல் முறையாகத் தகுதிபெற்ற இலங்கை அணி, அந்தத் தருணத்தைத் தக்கமுறையில் பயன்படுத்திக்கொண்டது.
இறுதியாட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, மார்க் ரெய்லரின் அரைச் சதத்தின் (74) உதவியுடன் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 241 ஓட்டங்களைச் சேர்த்தது.
பின்னர் வெற்றியிலக்கைத் துரத்திய இலங்கை அணிக்கு அரவிந்த டி
சில்வா தனது நிதான ஆட்டத்தின் மூலம் சதமடித்து நம்பிக்கை அளித்தார். இறுதியில் இலங்கை அணி 46.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரமே பறிகொடுத்து 245 ஓட்டங்களைச் சேர்த்து வெற்றியிலக்கைக் கடந்தது.
இதன் மூலம் அர்ஜூன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி முதல் முதலாக உலகக் கிண்ணத்தை வென்று சாதித்ததுடன், உலகக் கிண்ணத்தை வென்ற மூன்றாவது ஆசிய அணி என்ற பெருமையும் கிடைத்தது.
இறுதியாட்டத்தின் நாயகனாக இலங்கையின் அரவிந்த டி சில்வா தெரிவாக, தொடர் நாயகன் விருதை சக வீரரான சனத் ஜெயசூரிய பெற்றுக்கொண்டமை மேலும் இலங்கைக்குச் சிறப்பைக் கொடுத்தது.
அதேவேளை, முதல் சுற்றுப் போட்டிகளில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்திருந்த அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள், அக்காலகட்டத்தில் இலங்கையில் பாதுகாப்பு இல்லை எனக் கருதி, இலங்கையில் நடைபெறவிருந்த இலங்கைக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதனால் இலங்கைக்கு இரண்டு வெற்றிகள் விளையாடாமலே கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், கடந்த 5 உலகக் கிண்ண இறுதியாட்டங்களிலும் முதலில் துடுப்பெடுத்தாடிய அணிகளே கிண்ணத்தை வென்றிருந்தன. ஆனால், இந்தத் தொடரில் நாணயச் சுழற்சியில் வென்றபோதும் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்த இலங்கை அணித்தலைவர் ரணதுங்கவின் முடிவு அனைவருக்கும் அதிர்ச்சியையளித்தது. எனினும், பின்னர் இலங்கை வெற்றிபெற்று, உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்து வெற்றிபெற்ற முதலாவது அணி என்றபெருமையைப் பெற்றமையும் சிறப்பம்சமாகும்.
ஆதிக்கத்தை ஆரம்பித்த ஆஸி.!
ஏழாவது உலகக் கிண்ணத் தொடர் 1999ஆம் ஆண்டு மே 20 முதல் ஜூன் 20 வரை இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்றது.
12 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் இரண்டாகப் (‘ஏ’, ‘பி’) பிரிக்கப்பட்டு நடைபெற்றதுடன், இரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகள் ‘சுப்பர்-6’ சுற்றுக்குத் தகுதிபெற்று, அதிலிருந்து முதல் நான்கு அணிகள் அரையிறுதியில் மோதும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டது (அட்டவணைகள் தரப்பட்டுள்ளன). பின்னர் அரையிறுதியில் வெற்றிபெற்ற அணிகள் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றன.
அதன்படி பாகிஸ்தான் - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இறுதியாட்டத்தில், கில்கிறிஸ்ட் தலைமையிலான அவுஸ்திரேலியா சம்பியன் பட்டத்தை வென்றது. இது அந்த அணிக்கு இரண்டாவது சம்பியன் பட்டமாகும்.
நடப்பு சம்பியனாகக் களமிறங்கிய இலங்கை அணி முதல் சுற்றுடனே வெளியேற நேர்ந்தது.
அதேவேளை, அவுஸ்திரேலிய-தென்னாபிரிக்காவுக்கிடையிலான அரையிறுதியாட்டம் சமநிலையில் முடிந்தபோதும், ‘சுப்பர்-6’ சுற்றில் முன்னிலை வகித்தமையால் அவுஸ்திரேலிய அணிக்கு இறுதிப் போட்டிக்கான வாய்ப்புக் கிட்டியது.
இறுதியாட்டத்தின் நாயகனாக அவுஸ்திரேலியாவின் ஷேர்ன் வோனும், தொடரின் நாயகனாக தென்னாபிரிக்காவின் லான்ஸ் குளூசினரும் தெரிவாகினர்.
இந்த வெற்றியுடன், அடுத்தடுத்த உலகக் கிண்ணங்களிலும் வீழ்த்த முடியாத அணியாக அவுஸ்திரேலியா வலம் வர ஆரம்பித்தது. (தொடரும்)
No comments:
Post a Comment