Sunday, January 18, 2015

2015இன் முதல் சம்பியன் யார்?

நாளையதினம் ஆரம்பிக்கின்றது
அவுஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ்

உதைபந்தாட்டம், கிரிக்கெட் போன்ற குழு நிலை விளையாட்டுகளுக்கு உலகக் கிண்ணப் போட்டிகள் எந்தள வுக்கு முக்கிய மானதாக விளங்கு கின்றதோ அதே போல டென்னிஸுக்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் மிகவும் பிரபல்யமானதும் - மதிப்பு மிக்கதுமாக விளங்குகின்றன.
அத்தகைய கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்துப் பெற்ற நான்கு தொடர்கள் உள்ளன. அவை ஒவ்வாரு வருடமும் குறிப்பிட்ட பருவகாலத்தில் முறை தவறாது நடத்தப்பட்டு வருகின்றன.

அவுஸ்திரேலிய ஓப்பன், பிரெஞ்ச் ஓப்பன், விம்பிள்டன் ஓப்பன், அமெரிக்க ஓப்பன் ஆகியனவே கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்துப் பெற்ற மிகப் பெரிய நான்கு தொடர்களாகும்.
அவுஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடரே வருடத்தின் ஆரம்பத்தில் நடைபெறுகின்ற தொடராகும். இதற்கு அடுத்ததாக பிரெஞ்ச் ஓப்பன் தொடர் நடைபெறும். பின்னர் தொடர்ந்து விம்பிள்டன் ஓப்பன் டென்னிஸ் தொடர் நடைபெறும். வருடத்தின் இறுதியாக அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் தொடர் நடைபெறும்.
ஆண்டின் ஆரம்பத்தில் நடைபெறும் தொடரான அவுஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடர் நாளையதினம் (19) ஆரம்பமாகவுள்ளமையால் அத்தொடர் குறித்து
சிறிது பார்ப்போம்.
அவுஸ்திரேலிய ஓப்பன் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் நடைபெற்றுவருகின்றது.
1905ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இத்தொடர், 1987ஆம் ஆண்டு வரை புற்தரையிலேயே நடைபெற்று வந்தது. பின்னர் 1988ஆம் ஆண்டு முதல் செயற்கையாக உருவாக்கப்பட்ட வன்தரைகளில் நடைபெற்றுவருகின்றது.
ஏனைய கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்துப்பெற்ற தொடர்களைப் போலவே இதிலும் ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் (ஆண்-பெண்) மற்றும் இளையோருக்கான போட்டிகள் ஆகியன நடைபெறுகின்றன.
அவுஸ்திரேலிய கோடை காலத்தின் நடுப்பகுதியில் இப்போட்டிகள் நடைபெறுவதனால், காலநிலை மிகவும் சூடாகக் காணப்படுவது வழமை.
வருடம் தோறும் நடைபெறும் இத்தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கூடுதலான பட்டங்களை (06) வென்றவராக அவுஸ்திரேலியரான ரோய் எமெர்சன் விளங்குகிறார். இவர் 1961-1967 காலப்பகுதியில், 1963ஆம் ஆண்டு தவிர ஏனைய ஒவ்வொரு ஆண்டிலும் சம்பியன் பட்டத்தைத் தன்வசப்படுத்தியுள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக அமெரிக்காவின் அன்ட்ரூ அஹஸ்ஸியுடன் தற்போது விளையாடிவரும் சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் பெடரர் மற்றும் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் ஆகியோர் தலா 4 தடவைகள் பட்டங்களை வென்று இரண்டாவது இடத்தில் உள்ளனர்.
ஆண்கள் பிரிவைப் போலவே பெண்கள் ஒற்றையர் பிரிவில் அதிக அவுஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவராக அவுஸ்திரேலியாவின் மர்ஹரெட் கோர்ட் உள்ளார். இவர் 11 பட்டங்களை வென்றுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் தற்போது பெண்கள் ஒற்றையர் பிரிவில் கலக்கிவரும் அமெரிக்காவின்
செரீனா வில்லியம்ஸ் உள்ளார். இவர் 5 பட்டங்களைத் தன்வசப்படுத்தியுள்ளார்.
அதேவேளை, கடந்த ஆண்டு (2014) நடைபெற்ற தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சுவிட்ஸர்லாந்தின் வவ்ரிங்காவும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் சீனாவின் லி நாவும் (கடந்த ஆண்டு ஓய்வுபெற்றார்) பட்டங்களை வென்றதன் அடிப்படையில் தற்போது நடப்பு சம்பியன்களாகவுள்ளனர்.
அதேபோல, ஆண்கள் இரட்டையர் பிரிவில் குபொட் ( போலாந்து)-லின்ட்ஸ்டெட் (சுவீடன்) ஜோடியும், பெண்கள் இரட்டையரில் இத்தாலியின் எரானி-வின்சி ஜோடியும் நடப்புச் சம்பியன்களாக உள்ள அதேவேளை, கிறிஸ்டினா (பிரான்ஸ்)-நெஸ்டர் (கனடா) ஜோடி கலப்பு இரட்டையரில் நடப்புச் சம்பியன்களாக விளங்குகின்றனர்.
இந்த ஆண்டுக்கான தொடரில் பங்கேற்கும் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னிலை வீரர்களான நோவாக் ஜோகோவிச், ரோஜர் பெடரர், ரபேல் நடால், வவ்ரிங்கா, கெய் நிஷிகொரி, அன்டிமுர்ரே ஆகியோரிடையே கடும்போட்டி நிலைவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, பெண்கள் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ், மரியா ஷரபோவா, சிமன் ஹெலப், பெட்ரா கிவிரோவா, அனா இவனோவிக் அக்னிஸ்கா ரெட்வங்ஸ்கா மற்றும் கரோலின் வொஸ்னியாக்கி ஆகியோர் சிறந்த நிலையில் உள்ளவர்களாவர்.
இவர்களுள் செரீனா வில்லியம்ஸின் ஆதிக்கம் மேலோங்கிக் காணப்படுகின்ற போதும் அவருக்கு மரியா ஷரபோவா எப்போதுமே
சவாலாக விளங்குபவர். அதேவேளை, ஏனைய வீராங்கனைகளும்
சாதாரணமானவர்கள் அல்லர். அவர்களும் நெருக்கடி மிகுந்த வீராங்கனைகளே.
எனவே, நாளையதினம் ஆரம்பமாகும் 2015ஆம் ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் தொடர் மிகவும் விறுவிறுப்பாகவும் சுவாரஷ்யங்கள் நிறைந்ததாகவும் நகர்ந்து
செல்லவுள்ளமை தெட்டத்தெளிவாகிறது.
அதேவேளை, இத்தொடரின் ஒரு பகுதியாக நடைபெறவுள்ள இளையோருக்கான போட்டிகள் மற்றும் சக்கர நாற்காலியில் இருந்துகொண்டு விளையாடுவோருக்கான போட்டிகள் என்பனவும் இத்தொடரை மேலும் ரசனை மிகுந்ததாக மாற்றியமமைக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

No comments:

Post a Comment

Total Pageviews