Sunday, January 11, 2015

ஆசியாவுக்கு பெருமை சேர்த்த இந்தியா!

11ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 14ஆம் திகதி தொடக்கம் மார்ச் 29ஆம் திகதிவரை அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெறவுள்ளது. அதையொட்டி ‘உலகக் கிண்ணக் கிரிக்கெட்’ தொடர்பான கடந்த கால - தற்காலப் பதிவுகள் குறித்த அலசல்


 2 


முதலிரண்டு உலகக் கிண்ணத் தொடர்களை நடத்திய இங்கிலாந்திலேயே மூன்றாவது தொடரும் நடந்தது. இத்தொடர்  1983ஆம் ஆண்டு ஜூன் 9 முதல் 25ஆம் திகதி வரை நடைபெற்றது.

இத்தொடரில் இந்தியா, அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், இங்கிலாந்து, நியுஸிலாந்து, இலங்கை ஆகிய அணிகளுடன் புதிதாக சிம்பாப்வே அணி இணைக்கப்பட்டது. கனடா விலக்கப்பட்டது.

முதலிரண்டு உலகக் கிண்ணத் தொடரைப் போலவே இத்தொடரிலும் முதல் சுற்றுப் போட்டிகளுக்காக அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டபோதும் (அட்டவணை தரப்பட்டுள்ளது), ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தத்தமது பிரிவிகளிலுள்ள ஏனைய அணிகளுடன் தலா 2 முறைகள் போட்டியிடும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டிருந்தது.

முதல் சுற்றுப் போட்டிகள் முடிந்தபின்னர் நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து அணி (213), ‘பி’ பிரிவில் இரண்டாமிடம் பிடித்த இந்தியாவிடம் (217/4) 6 விக்கெட்டுகளால் தோற்றது. அதேபோல, மற்றொரு அரையிறுதியில்  ‘ஏ’ பிரிவில் இரண்டாவது இடம்பிடித்த பாகிஸ்தானை (184/8), ‘பி’ பிரிவில் முதலிடம் பிடித்திருந்த மேற்கிந்தியத் தீவுகள் (188/2) 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.


பின்னர் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது தடவையாகவும் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மேற்கிந்தியத் தீவுகள் அணியை, முதல் முறையாக இறுதியாட்டத்துக்கு முன்னேறிய ஆசிய அணி என்ற பெருமையுடன் இந்திய அணி எதிர்கொண்டது.

இதில், நாணயச் சுழற்சியில் வென்ற லியோட் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி, களத்தடுப்பைத் தெரிவுசெய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, 54.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து வெறும் 183 ஓட்டங்களையே சேர்த்தது. அந்த அணி சார்பாக ஆகக்கூடுதலாக  சிறிகாந்த் 38 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

பின்னர் வெற்றியிலக்கு நோக்கித் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியால் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல்போக, முதல் முறையாக உலகக் கிண்ணத்தை இழக்கும் நிலை நோக்கி நகர்ந்தது.

இறுதியில் அந்த அணி, 52 ஓவர்களில் 140 ஓட்டங்களுள் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனால், இந்திய அணி 43 ஓட்டங்களால் வெற்றிபெற்று சரித்திரம் படைத்தது. 

அத்துடன், உலகக் கிண்ணத்தை வென்ற இரண்டாவது அணி என்ற பெருமையும் அந்த அணிக்குக் கிடைத்தது.

இந்த ஆட்டத்தின் நாயகனாக 7 ஓவர்களை வீசி 12 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவிய இந்தியாவின் அமர்நாத் தெரிவுசெய்யப்பட்டார்.

அதேவேளை, முதலாவது மற்றும் இரண்டாவது உலகக் கிண்ணத் தொடர்களைப் போலவே இத்தொடரின் இறதியாட்டத்திலும் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தெரிவுசெய்த அணியே தோல்வியடைந்துள்ளது. இம்முறை அந்தத் துர்ப்பாக்கியம் மேற்கிந்தியத் தீவுகளைச் சென்றடைந்துள்ளது.

இத்தொடரின் முதல் சுற்று ஆட்டங்களில் ‘ஏ’ பிரிவில் கடைசி இடம்பிடித்த இலங்கை அணி ஒரே ஒரு வெற்றி மாத்திரமே பெற்றது. அந்த வெற்றி நியூஸிலாந்துக்கு எதிராகக் கிடைத்தது. 

அதேபோல முதல் முறையாக உலகக் கிண்ணத் தொடருக்குத் தகுதிபெற்ற சிம்பாப்வே அணி, அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



‘ஏ’பிரிவு - முதல் சுற்றில் அணிகளின் நிலைவரம்

அணி             போ  வெ தோ புள்ளி

இங்கிலாந்து  6 5 1 20

பாகிஸ்தான்  6 3 3 12

நியூஸிலாந்து 6 3 3 12

இலங்கை         6 1 5 04


‘பி’பிரிவு - முதல் சுற்றில் அணிகளின் நிலைவரம்

அணி              போ வெ தோ புள்ளி

மே.இ.தீவுகள் 6 5 1 20

இந்தியா        6 4 2 16

ஆஸி.               6 2 4 08

சிம்பாப்வே       6 1 5 04


(தொடரும்)



No comments:

Post a Comment

Total Pageviews