Sunday, January 25, 2015

சாதனைகள் பலதை நொறுக்கித்தள்ளிய ஏபிடி!


சிறந்த விளையாட்டு வீரர்கள் பலர் இருப்பினும், அவர்களுள் அதீத திறமையை வெளிப்படுத்துவோரால்தான் உலகளவில் முதன்மை மிக்கவர்களாக வலம் வர முடிகின்றது.
அந்த வகையில் அண்மையில் ஒரே போட்டியில் பல சாதனைகள் நிலை நாட்டப்பட காரணமாகவிருந்து - கிரிக்கெட் உலகத்தையே தன் பக்கம்
திரும்பிப் பார்க்கச் செய்துள்ளார் தென்னாபிரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸ்.
தென்னாபிரிக்காவில் நடைபெற்றுவரும் மேற்கிந்தியத் தீவுகள் - தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி கடந்த 18.01.2015 அன்று ஜோகனஸ் பேர்க்கில் நடைபெற்றது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 38.3 ஓவர்களில் 247 ஓட்டங்களைக் குவித்த நிலையில் தனது முதல் விக்கெட்டாக ரோசௌவை இழந்தது. அவர் சதமடித்து (128 ஓட்டங்கள்) சிறிது நேரத்தில் ஆட்டமிழந்திருந்தார்.
இந்நிலையில், இரண்டாவது விக்கெட்டுக்காக அம்லாவுடன் இணைந்து ஆட ஏபி டி வில்லியர்ஸ் களமிறங்கினார்.
அதிரடியாக ஆடும் இவரது ஆட்டப்பாணி அனைவரும் அறிந்ததே. எனினும், வந்தவர் தாறு மாறாக மைதானத்தின் நாலாபுறமும் மேலாகவும் கீழாகவும் பந்துகளை இடைவிடாது துரத்துவார் என எவரும் எதிர்பார்த்திருக்கமுடியாது.
வந்தவேகத்திலேயே தனது அதிரடியை ஆரம்பித்த அவர், 1996ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கையின் சனத் ஜெயசூரிய ஆடிய ஆட்டத்தை விஞ்சும் வகையில் ஆடி, சனத் நிலைநாட்டிய அதிவேக அரைச்சதம் (17 பந்துகளில்) என்ற சாதனையை 16 பந்துகளில் அடித்து-முறியடித்து புதிய பரபரப்பை ஏற்படுத்தினார்.
அந்தச் சாதனையை நிலைநாட்டியவர் தொடர்ந்தும் தனது துடுப்பு மட்டைக்கு ஓய்வை கொடுக்கத் தவறினார். நாலாபுறமும் தனது துடுப்பு மட்டையை இடைவிடாது விசுக்கிய அவர், கடந்த வருடம் (2014) இதே மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நியூஸிலாந்தின் அன்டர்சன் 36 பந்துகளில் அடித்த அதிவேக சத சாதனையை 31 பந்துகளில் அடித்து முறியடித்து தனக்குரியதாக்கினார்.
களத்தில் 59 நிமிடங்கள் மாத்திரமே நிலைத்து நின்று ஆடிய அவர், 44 பந்துகளில் 149 ஓட்டங்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அம்லா 153 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.
இந்தப் போட்டியில் தென்னாபிரிக்க அணி 148 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
வேகமான அரைச்சதம் மற்றும் 
சதம் என இரு சாதனைகளை நிகழ்த்திய டிவில்லியர்ஸுக்கு மற்றுமொரு சாதனையை இந்தியாவின் ரோஹித் சர்மாவுடன் பகிர்ந்துகொள்ளும் சந்தர்ப்பமும் கிட்டியது.
அதாவது ஓர் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற பெருமையே அதுவாகும்.
ஓர் இன்னிங்ஸில் 16 சிக்ஸர்களை அடித்து முதலிடத்தில் தனி ஆளாக இருந்த ரோஹித்துடன், டிவில்லியர்ஸும் இணைந்ததன் மூலம், ஒரே போட்டியில் மூன்று சாதனையைப் படைத்து மும்மடங்கு மகிழ்ச்சியில் திளைத்தார் வில்லியர்ஸ்.
அதுமாத்திரமின்றி அந்தப் போட்டியில் அவர் தனது அணியின் இலகுவான வெற்றிக்கும் வழிவகுத்ததுடன், ஓர் இன்னிங்ஸில் ஓர் அணி மூன்று தடவைகள் 400 ஓட்டங்களைக் (439) கடந்த முதலாவது அணி என்ற பெருமையைப் பெறவும் காரண கர்த்தாவாக விளங்கினார்.
ஓர் இன்னிங்ஸில் அதிகூடிய ஓட்டங்களைச் சேர்த்த அணிகள் வரிசையில் இலங்கை (443/9) முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது (439/2), மூன்றாவது  (438/9) மற்றும் ஐந்தாவது (418/5) இடங்களில் தென்னாபிரிக்க அணி உள்ளது (இந்திய அணியும் ஐந்தாவது இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளது 418/5). நான்காவது இடத்தில் அவுஸ்திரேலியா (434/4) உள்ளது.
அதேவேளை, ஒரே இன்னிங்ஸில் ஒரே அணியைச் சேர்ந்த மூன்று வீரர்கள் சதமடித்ததும் இந்தப் போட்டியில் நிகழ்ந்துள்ளது. இவ்வாறு நிகழ்வது இதுவே முதல் தடவையாகும்.
இத்தகைய பல்வேறு சாதனைகளுக்குக் காரண கர்த்தாவாக இருந்துள்ள டிவில்லியர்ஸ், அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் நெருங்கும்வேளை தனது அதிரடியைக் காட்டியுள்ளமையானது, உலகக் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்க அணி மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளார் என்றார் மிகையில்லை.

No comments:

Post a Comment

Total Pageviews

8,866