11ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 14ஆம் திகதி தொடக்கம் மார்ச் 29ஆம் திகதிவரை அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெறவுள்ளது. அதையொட்டி ‘உலகக் கிண்ணக் கிரிக்கெட்’ தொடர்பான கடந்த கால - தற்காலப் பதிவுகள் குறித்த அலசல்
1
எஸ்.ஜெயானந்தன்கிரிக்கெட்டின் பாரம்பரியமிக்க போட்டியாக டெஸ்ட் போட்டிகள் விளங்குகின்றன. எனினும், அந்தப் போட்டியில் உலகக் கிண்ணத் தொடரை நடத்துவதற்குக் கடினமாக இருந்தது. இதனால் பிற்காலத்தில், அதாவது 1971ஆம் ஆண்டு காலப்பகுதியில் 60 ஓவர்களைக் கொண்ட ஒருநாள் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

முதல் உலகக் கிண்ணத் தொடரில் இந்தியா, அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், இங்கிலாந்து, நியுஸிலாந்து,கிழக்கு ஆபிரிக்கா, இலங்கை ஆகிய எட்டு அணிகள் பங்குபெற்றன. அக்காலத்தில் தென்னாபிரிக்காவில் நிலவிய இன ஒதுக்கல் காரணமாக அந்நாட்டு அணிக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இத்தொடரில் பங்கேற்ற அணிகளுள் இலங்கை மற்றும் கிழக்கு ஆபிரிக்க அணிகள் டெஸ்ட் அந்தஸ்தற்ற அணிகளாக விளங்கின.
முதல் சுற்றுப் போட்டிகளுக்காக எட்டு அணிகளும் தலா நான்கு அணிகளாக ‘ஏ’, ‘பி’ என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன (அட்டவணை தரப்பட்டுள்ளது). இரு பிரிவுகளிலும் இடம்பிடித்த அணிகள் தத்தமது பிரிவுகளில் உள்ள ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோதின.
முதல் சுற்றின் முடிவில் இரு பிரிவுகளிலும் முதலிரு இடங்களைப் பிடித்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அதன்படி ‘ஏ’ பிரிவில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து அணி (93 ஓட்டங்கள்), ‘பி’ பிரிவில் இரண்டாமிடம் பிடித்த அவுஸ்திரேலியாவிடம் வீழ்ந்தமையால் (94/6) அவுஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதேபோல மற்றொரு அரையிறுதியில் ்ஏி பிரிவில் இரண்டாவது இடம்பிடித்த நியூஸிலாந்து அணி (158), ‘பி’ பிரிவில் முதலிடம் பிடித்திருந்த மேற்கிந்தியத் தீவுகளிடம் (159/5) தோல்வியடைந்தது.
இதன் இறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள்- அவுஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 60 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 291 ஓட்டங்களைச் சேர்த்தது. அந்த அணி சார்பாக லொய்ட் (102) சதம் அடித்தார்.
பின்னர் தனது இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணியால் வெற்றியிலக்கை அடையமுடியவில்லை. அந்த அணி 58.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 274 ஓட்டங்களையே சேர்த்தமையால் மேற்கிந்தியத் தீவுகள் அணி 17 ஓட்டங்களால் வெற்றிபெற்று முதலாவது உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
இறுதியாட்டத்தின் நாயகனாக மேற்கிந்தியத் தீவுகளின் லொய்ட் தெரிவானார்.
இந்தத் தொடரில் பங்கேற்ற அணிகளுள் இலங்கை மற்றும் கிழக்கு ஆபிரிக்க அணிகளால் எந்தவொரு வெற்றியையும் பெறமுடியவில்லை.
அதேவேளை அவுஸ்திரேலிய அணியுடனான ஆட்டத்தில் அந்த அணி வீரர்களான ஜெப்தோம்சன், லிலி ஆகியோரின் பந்துவீச்சில் இலங்கை அணியின் துலிப் மென்டிஸ் மற்றும் சுனில் வெத்தமுனி ஆகியோர் காயத்துக்குட்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இது இலங்கைக் கிரிக்கெட்டுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
........................................
இலங்கைக்கு முதல் வெற்றி
மே.இ.தீவுகளுக்கு 2ஆவது கிண்ணம்!
முதலாவது உலகக் கிண்ணத் தொடரை நடத்திய இங்கிலாந்திலேயே இரண்டாவது உலகக் கிண்ணத் தொடரும் நடத்தப்பட்டது. நான்கு ஆண்டுகள் கழித்து 1979ஆம் ஆண்டு ஜூன் 9 முதல் 23ஆம் திகதி வரை இத்தொடர் நடைபெற்றது.
இரண்டாவது உலகக் கிண்ணத் தொடரில் இந்தியா, அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், இங்கிலாந்து, நியுஸிலாந்து, இலங்கை ஆகிய அணிகளுடன் புதிதாக கனடா இணைக்கப்பட்டது. ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கவில்லை.
முதலாவது உலகக் கிண்ணத் தொடரைப் போலவே இத்தொடரிலும் முதல் சுற்றுப் போட்டிகளுக்காக அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன (அட்டவணை தரப்பட்டுள்ளது).
முதல் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து அணி (221/8), ‘பி’ பிரிவில் இரண்டாமிடம் பிடித்த நியூஸிலாந்தை (212/9) ஒன்பது ஓட்டங்களால் முதலாவது அரையிறுதியில் வெற்றிபெற்றது. அதேபோல, மற்றொரு அரையிறுதியில் ‘ஏ’ பிரிவில் இரண்டாவது இடம்பிடித்த பாகிஸ்தானை (250), ‘பி’ பிரிவில் முதலிடம் பிடித்திருந்த மேற்கிந்தியத் தீவுகள் (293/6) 43 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

பின்னர் வெற்றியிலக்கு நோக்கித் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியால் 51 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 194 ஓட்டங்களையே
சேர்க்க முடிந்தது. இதனால், மேற்கிந்தியத் தீவுகள் அணி 92 ஓட்டங்களால் வெற்றிபெற்று இரண்டாவது உலகக் கிண்ணத்தையும் தன்வசப்படுத்தியது.
இறுதியாட்டத்தின் நாயகனாக மேற்கிந்தியத் தீவுகளின் விவ் ரிச்சர்ட் தெரிவானார்.
இத்தொடரின் முதல் சுற்றுப் போட்டிகளில் இந்திய அணியை (191) 47 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கை அணி (238/5), தனது முதலாவது உலகக் கிண்ண வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த ஆட்டத்தில் துலிப் மென்டிஸ் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.
அதேவேளை, இத்தொடரில் இந்தியா மற்றும் கனடா அணிகளால் எந்தவொரு வெற்றியையும் பெறமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதலாவது மற்றும் இரண்டாவது உலகக் கிண்ணத் தொடர்களின் இறுதியாட்டங்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை எதிர்த்தாடிய இரு அணிகளும், இறுதியாட்டத்துக்கான நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்றதுடன், மேற்கிந்தியத் தீவுகளையே முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
(தொடரும்)
No comments:
Post a Comment