11ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 14ஆம் திகதி தொடக்கம் மார்ச் 29ஆம் திகதிவரை அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெறவுள்ளது. அதையொட்டி ‘உலகக் கிண்ணக் கிரிக்கெட்’ தொடர்பான கடந்த கால - தற்காலப் பதிவுகள் குறித்த அலசல்
3
முதல் மூன்று உலகக் கிண்ணத் தொடர்களும் இங்கிலாந்தில் நடைபெற்ற நிலையில், முதல் முறையாக ஆசியக்கண்டத்தில் நான்காவது உலகக் கிண்ணத்தொடர் நடத்தப்பட்டது. 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் 8 முதல் நவம்பர் 8ஆம் திகதி வரை நடைபெற்ற இந்தப் போட்டித் தொடரை இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து நடத்தின.
இத்தொடரிலும் மூன்றாவது தொடரில் பங்கேற்ற அதே
அணிகளே பங்கேற்றன. அதேவேளை, முதல் முறையாக 60 ஓவர்களிலிருந்து 50 ஓவர்களாக போட்டி முறைமை மாற்றியமைக்கப்பட்டது.
இத்தொடரிலும் முதல் சுற்றுப் போட்டிகளுக்காக அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு (அட்டவணை தரப்பட்டுள்ளது), ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தத்தமது பிரிவிகளிலுள்ள ஏனைய அணிகளுடன் தலா 2 முறைகள் போட்டியிட்டன.

அதேபோல, மற்றொரு அரையிறுதியில் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பிடித்த - நடப்புச் சம்பியனாகக் களமிறங்கிய இந்தியாவை (219), ‘பி’ பிரிவில் இரண்டாமிடம் பிடித்திருந்த இங்கிலாந்து (254/6) 65 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
பின்னர் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அவுஸ்திரேலிய - இங்கிலாந்து அணிகள் மோதின.
இதில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, பூன் அடித்த 75 ஓட்டங்களின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை மாத்திரமே பறிகொடுத்து 253 ஓட்டங்களைச்
சேர்த்தது.
பின்னர் வெற்றியிலக்கைத் துரத்த ஆரம்பித்த இங்கிலாந்து அணியால் 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 246 ஓட்டங்களையே சேர்க்கமுடிந்தது.
இதனால், அலன் போர்டர் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி 7 ஓட்டங்களால் த்ரில் வெற்றிபெற்று முதல் முறையாக உலகக் கிண்ணத்தை நுகர்ந்தது.
இந்த ஆட்டத்தின் நாயகனாக அவுஸ்திரேலியாவின் பூன் தெரிவானார்.
இத்தொடரில் கூடுதல் ஓட்டங்களைப் பெற்றவராக (471) கிராகம் கூச் விளங்குகிறார். அதேவேளை, அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவராக (18) கிரைக் மக்டேர்மொட் உள்ளார்.
ஏற்கனவே நடைபெற்று முடிந்த மூன்று உலகக் கிண்ணத் தொடர்களின் இறுதியாட்டங்களிலும் முதலில் துடுப்பெடுத்தாடிய அணியே கிண்ணத்தை வென்றது. அதன் தாக்கம் நான்காவது தொடரிலும் பிரதிபலித்திருந்தமை அதிசயிக்கவைத்தது.
அதேவேளை, முதன் முறையாக இறுதியாட்டத்துக்குத் தகுதிபெறமுடியாமல் மேற்கிந்தியத் தீவுகள் வெளியேறியமை, அந்த அணியின் பின்னடைவின் ஆரம்பமாக விளங்கியது. அதன்பின்னர் அந்த அணியால் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறவே முடியாமல் போய்விட்டது.
இத்தொடரின் முதல் சுற்று ஆட்டங்களில் ‘பி’ பிரிவில் கடைசி இடம்பிடித்த இலங்கை அணியாலும், ‘ஏ’ பிரிவில் கடைசி இடத்தைப் பிடித்த சிம்பாப்வே அணியாலும் எந்தவொரு வெற்றியையும் பெறமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஏ’பிரிவு - முதல் சுற்றில் அணிகளின் நிலைவரம்
அணி போ வெ தோ புள்ளி
இந்தியா 6 5 1 20
ஆஸி. 6 5 1 20
நியூஸிலாந்து 6 2 4 08
சிம்பாப்வே 6 0 6 00
‘பி’பிரிவு - முதல் சுற்றில் அணிகளின் நிலைவரம்
அணி போ வெ தோ புள்ளி
பாகிஸ்தான் 6 5 1 20
இங்கிலாந்து 6 4 2 16
மே.இ.தீவுகள் 6 3 3 12
இலங்கை 6 0 6 00
............
ஆசியர்களின் மற்றொரு வெற்றி
ஐந்தாவது உலகக் கிண்ணத்தொடரை நடத்தும் வாய்ப்பு அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்துக்குக் கிடைத்தது. இந்நாடுகள் இணைந்து நடத்திய ஐந்தாவது தொடர், 1992ஆம் ஆண்டு பெப்ரவரி 22ஆம் திகதி முதல் மார்ச் 25ஆம் திகதி வரை நடைபெற்றது.
இத்தொடரில் புதிய பல முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. முந்தைய தொடர்களில் வீரர்கள் வெள்ளை நிற ஆடைகளை மாத்திரமே அணிய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இத்தொடரில் வீரர்கள் வர்ண ஆடைகள் அணிய அனுமதி வழங்கப்பட்டது. அத்துடன், ஆட்டங்கள் பகல்-இரவு ஆட்டங்களாகவும் நடத்தப்பட்டன. அதேவேளை, வெள்ளை நிறப்பந்தும் பயன்படுத்தப்பட்டது. நடு விக்கெட்டில் கமரா பொருத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இத்தொடரில் மூன்றாவது மற்றும் நான்காவது தொடர்களில் பங்கேற்ற அதே அணிகளுடன் முன்னர் இனவொதுக்கல் சர்ச்சை காரணமாக தடை செய்யப்பட்டிருந்த தென்னாபிரிக்க அணியும் பங்கேற்றமையால் 9 அணிகள் பங்கேற்றன.
இத்தொடரின் புதிய முறைமைகளின் வரிசையில் முதல் சுற்றுப் போட்டிகளிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டிருந்தது.
அதாவது, முதல் சுற்றுப் போட்டிகளுக்காக அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படாமல், ஒவ்வொரு அணிகளும் ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோதும் வகையில் அட்டவணையிடப்பட்டு, ஒவ்வொரு அணிக்கும் தலா எட்டுப் போட்டிகள் வீதம் வழங்கப்பட்டன.
முதல் சுற்றுப்போட்டிகள் அனைத்தும் முடிந்தபின்னர் புள்ளிகளடிப்படையில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தெரிவுசெய்யப்பட்டு, அதில் முதலிடம் பிடித்த அணி, நான்காவது இடத்தைப் பிடித்த அணியுடனும், இரண்டாவது இடத்தைப் பிடித்த அணி மூன்றாவது இடத்தைப் பிடித்த அணியுடனும் மோதி, இவற்றில் பெற்றுபெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வகையில் போட்டி அட்டவணை வடிவமைக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் இத்தொடரில் முதல் சுற்றுப் போட்டிகளின் முடிவில் முதல் நான்கு இடங்களை முறையே நியூஸிலாந்து, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பிடித்தன.
பின்னர் முதலாவது அரையிறுதியில் நியூஸிலாந்து அணி (262/7), பாகிஸ்தானிடம் (264/6, 49/50) 4 விக்கெட்டுகளால் தோல்வியடைந்தது.
இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து அணி (252/6, 45/45, மழை காரணமாக 5 ஓவர்கள் குறைக்கப்பட்டது), தென்னாபிரிக்க அணியை (232/6,43/43, மழை காரணமாக வெற்றியிலக்காக 43 ஓவர்களில் 252 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.) 19 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
பின்னர் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோதின.
இதில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணி, அணித்தலைவர் இம்ரான்கான் விளாசிய 72 ஓட்டங்களின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை மாத்திரமே பறிகொடுத்து 249 ஓட்டங்களைச் சேர்த்தது.
பின்னர் வெற்றியிலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணியால் 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 227 ஓட்டங்களையே சேர்க்கமுடிந்தது.
இதனால், பாகிஸ்தான் அணி 22 ஓட்டங்களால் வெற்றிபெற்று முதல் முறையாக உலகக் கிண்ணத்தை வென்றதுடன், உலகக் கிண்ணத்தை வென்ற இரண்டாவது ஆசிய அணி என்ற பெருமையைப் பெற்றதுடன், ஆசியக் கண்டத்துக்கும் புகழைத் தேடிக் கொடுத்தது.
இந்த ஆட்டத்தின் நாயகனாக பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளரான வாஸிம் அக்ரம் தெரிவானார். தொடரின் நாயகனாக நியூஸிலாந்தின் மார்டின் குரோ (456 ஓட்டங்கள்) தெரிவானார்.
ஏற்கனவே நடைபெற்று முடிந்த உலகக் கிண்ணத் தொடர்களின் இறுதியாட்டங்களில் நிகழ்ந்த அதே அதிசயம் இந்த ஆட்டத்திலும் நிகழத்தவறவில்லை. அதாவது முதலில் துடுப்பெடுத்தாடிய அணியே கிண்ணத்தை வென்றது.
இத்தொடரின் முதல் சுற்று ஆட்டங்களில் இலங்கை அணி, தென்னாபிரிக்கா மற்றும் சிம்பாப்வே அணிகளுடனாக போட்டிகளில் மாத்திரமே வென்றது. இந்தியாவுடனான போட்டி மழை காரணமாக 2 பந்துகள் வீசப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்டது. ஏனைய போட்டிகளில் இலங்கை அணி தோல்வியையே அடைந்தது.
முதல் சுற்றில் அணிகளின் நிலைவரம்
அணி போ வெ தோ மு.அ புள்ளி
நியூஸிலாந்து 8 7 1 1 14
இங்கிலாந்து 8 5 2 - 11
தெ.ஆபிரிக்கா 8 5 3 - 10
பாகிஸ்தான் 8 4 3 1 09
ஆஸி. 8 4 4 - 08
மே.இ.தீவுகள் 8 4 4 - 08
இந்தியா 8 2 5 1 05
இலங்கை 8 2 5 1 05
சிம்பாப்வே 8 1 7 - 02
No comments:
Post a Comment