Sunday, January 4, 2015

இந்திய கிரிக்கெட்டை வழிநடத்திய உதைபந்தாட்ட கோல் காப்பாளர்!

Coolஆக இருந்தவர்
Hotஆகியது ஏன்?

எஸ்.ஜெயானந்தன்

வ்வொரு விளையாட்டு நட்சத்திரங்களுக்கும் ஓர் ஆரம்பம், ஒரு முடிவு என்பன இருக்கின்றன. அது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
இத்தகைய வீரர்களின் ஆரம்பம் அவர்களுக்கு எவ்வளவு சவால் மிகுந்ததாக உள்ளதோ அதேபோலத்தான் முடிவிலும் நெருக்கடிகள் நிலவும்.
ஆரம்பத்தில் ஒரு வீரர் தனது திறமையை திறம்பட வெளிப்படுத்தும்போது அவருக்கு உள்நாட்டில் மாத்திரமின்றி சர்வதேச ரீதியிலும் 
சிறந்ததோர் அங்கீகாரம் கிடைக்கிறது.
அந்த வரிசையில் வந்தவர்தான் இந்திய அணியின் ‘கூல் கப்டன்’ என தற்போது அழைக்கப்படும் டோனி.
பான் சிங் - தேவகி தேவி தம்பதியருக்கு பிஹார், ராஞ்சியில் (தற்போது ஜார்கண்டில் உள்ளது) 1981ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7ஆம் திகதி மகனாகப் பிறந்தார் மஹேந்திர சிங் டோனி.
ஜார்கண்ட்-ராஞ்சியில் உள்ள ஷியாமளி டி.ஏ.வி. ஜவஹர் வித்யாலய மந்திரில் படித்த இவர், ஆரம்ப காலத்தில் இறகுப்பந்தாட்டம் மற்றும் உதைபந்தாட்டம் ஆகியவற்றிலேயே அதிக ஈடுபாடுகாட்டினார். இவற்றில் இவர் வெளிப்படுத்திய திறமையினால், மாவட்ட மற்றும் கழகங்களுக்கிடையிலான போட்டிகளில் பங்கேற்கும் அணிகளிலும் தவிர்க்க முடியாத ஒருவரானார்.
உதைபந்தாட்ட அணிக்கு கோல்காப்பாளராகப் பணி புரிந்த இவர், உள்ளூர் துடுப்பாட்ட அணியில் விளையாடும்படி அவரது உதைபந்தாட்டப் பயிற்சியாளரால் அனுப்பிவைக்கப்பட்டார்.
கிரிக்கெட்டில் பெரிதாக அனுபவம் இல்லாதபோதும் படிப்படியாக தனது விக்கெட் காப்புத் திறமையை வெளிக்காட்டி உள்ளூர் கழகமான கமாண்டோவில் இடம்பிடித்தார். 
1995 - 1998 காலப்பகுதியில் தனது திறனை வெளிப்படுத்தியதன் விளைவாக இவருக்கு பதினாறு வயதிக்குட்பட்டோருக்கான வினு மான்கட் கிண்ண சம்பியன்ஷிப் 1997/98 காலப்பகுதியில் விளையாட இடம் கிடைத்தது.
பின்னர் இவர் ஏனைய விளையாட்டுக்களிலிருந்த ஈடுபாட்டைக் குறைத்துக்கொண்டு கிரிக்கெட்டின் மீது தனது கவனத்தை முழுமையாகச் செலுத்தினார்.
பின்னர் படிப்படியாக பல்வேறு உள்ளூர் தொடர்களில் பங்கேற்று வந்த இவருக்கு இந்திய ‘ஏ’ அணியில் இடம் கிடைத்ததன் மூலம் சர்வதேச அங்கீகாரமும் கிடைத்தது. இவற்றிலும் தொடர்ந்து கலக்கி வந்த அவருக்கு, 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் திகதி சிட்டாகொங்கில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது.
பின்னர் 2005ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் திகதி தொடக்கம் 6ஆம் திகதிவரை சென்னையில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் சந்தர்ப்பமும் கிடைத்தது.
தனது திறமை மூலம் இந்திய அணியில் நிரந்தர இடத்தைப் பிடித்துக்கொண்ட இவர், அணிக்கான தலைமைத்துவத்தையும் தன்வசப்படுத்திக்கொண்டார். 2007ஆம் ஆண்டில் ஒரு நாள் போட்டிகளுக்கான அணித்தலைவர் பதவியையும், 2008ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணித்தலைவர் பதவியையும் கைப்பற்றினார். ‘இருபது-20’ அணிக்கான தலைவராக இவரே ஆரம்பம் முதல் உள்ளார்.
தனது தலைமையில் இந்திய அணியை ஒருநாள் மற்றும் ‘இருபது-20’ போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெறவைத்தபோதும், டெஸ்ட் போட்டிகளில் இவரது தலைமைத்துவம் எடுபடவில்லை என்றே கூறவேண்டும்.
அதற்கு இவர் தலைமையிலான இந்திய அணியின் டெஸ்ட் பெறுபேறுகள் சான்றாக 
உள்ளன.
எனினும், ஏனைய இந்திய டெஸ்ட் அணித்தலைவர்களுடன் ஒப்பிடுகையில் இவர் பெற்றுக்கொடுத்த வெற்றிகள் அதிகமாகவே உள்ளன. உள்நாட்டில் டெஸ்ட் போட்டிகளில் ஓரளவுக்கு வெற்றிகளைப் பெற்றபோதும், வெளிநாடுகளில் படுமோசமான தோல்விகளையே இவர் சந்தித்துள்ளார்.
இவ்வாறு வெளிநாடுகளில் டெஸ்ட் தோல்விகளை இவர் தலைமையிலான இந்திய அணி சந்தித்துவந்த நிலையில், தற்போது அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரிலும் படுமோசமாக ஆடிவருகிறது.
முதலாவது போட்டியில் காயம் காரணமாக டோனி விலகிக்கொண்டமையால் அந்தப் போட்டிக்கு கோஹ்லி தலைமை தாங்கினார். அத்துடன், அந்தப் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் கோஹ்லி அசத்தல் ஆட்டத்தை (இரு சதங்களை அடித்தார்) வெளிப்படுத்தியபோதும் - இலக்கை நெருங்கியபோதும் அந்த அணியால் வெற்றிபெறமுடியவில்லை.
பின்னர் இரண்டாவது ஆட்டத்துக்கு டோனி தலைமை தாங்கினார். இந்த ஆட்டத்திலும் இந்திய அணி தோல்வியடைந்தது.
பின்னர் மெல்பேர்ணில் நடைபெற்ற மூன்றாவது ஆட்டம் சமநிலையில் முடிந்தமையால், இத்தொடர் அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமானது.
இந்த ஆட்டம் முடியும்வரை அமைதி காத்த டோனி, சிறிது நேரத்தில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக இந்தியக் கிரிக்கெட் சபையினூடாக அறிவித்திருந்தமை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
திறமையான நிலையில் உள்ள வீரர் ஒருவர் அதுவும் அணியை வழி நடத்தும் ஒருவர் திடீரென எதற்காக ஓய்வை அறிவித்தார்? பின்னணியில் நடந்தது என்ன? இவ்வாறு பல்வேறு சர்ச்சைக்குரிய வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
எனினும், இதுகுறித்து கருத்துத் தெரிவித்த இந்தியக் கிரிக்கெட் சபைச் செயலாளர் சஞ்சே பட்டேல், ‘இது திடீரென்று எடுக்கப்பட்ட முடிவு அல்ல. ஏற்கனவே இதுகுறித்து விவாதித்துள்ளோம்’ என்று கூறினார்.
அப்படியானால் ஒரு சிறந்த வீரரை - அணித்தலைவரை சிறப்பான முறையில் வழியனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படாதது ஏன்? எதற்காக திடீரென அதுவும் போட்டி முடிந்ததும் அறிவிக்கவேண்டும்? இந்தக் கேள்விகளுக்குப் பதில் இல்லை. 
இதனால், விளையாட்டுக்களத்துக்கு வெளியே டோனிக்குக் கடும் நெருக்கடி நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது தெட்டத்தெளிவாகிறது.
முதல் டெஸ்டில் சிறப்பாக அணியை வழிநடத்திய விராத் கோஹ்லியிடம் அணித்தலைமைப் பதவியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்திருக்கலாம். இதனால், அவசர அவசரமாக தனது ஓய்வை டோனி அறிவித்திருக்கக்கூடும். 
இதற்கிடையில், இந்திய முன்னாள் வீரர் ரவிசாஸ்திரி - கோஹ்லி கூட்டணியின் ஆதிக்கம் காரணமாக டோனி ஒதுக்கப்பட்டார் எனவும், அதனால்தான் டோனி திடீரென ஓய்வை அறிவித்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் தனது 10 வருட கிரிக்கெட் பயணத்தை பூர்த்திசெய்துகொண்ட நிலையில் டோனிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளமை வருந்தற்குரியதே.
இதுவரை 90 டெஸ்ட் போட்டிகளில் (144 இன்னிங்ஸ்கள்) விளையாடியுள்ள டோனி, 6 சதங்கள், 33 அரைச்சதங்கள் அடங்கலாக 4,876 ஓட்டங்களைச் சேர்த்துள்ளார்.
சிறந்த வீரராக விளங்கிவந்த டோனி, முறைப்படி வழியனுப்பப்படாமல் ஓய்வுபெற்றமை பெரும் அதிர்ச்சியே.
.....................................

டெஸ்டில் டோனி...

டெஸ்டில் அதிக வெற்றிகளைத் தேடிக்கொடுத்த இந்திய அணித்தலைவராகவும் டோனி (27 வெற்றி) விளங்குகிறார். இரண்டாவது இடத்தில் கங்குலி (21) உள்ளார்.

அதிக டெஸ்ட் போட்டிகளுக்கு (60) இந்திய அணியின் தலைவராக இருந்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் சௌரவ் கங்குலி (49 டெஸ்ட்கள்) உள்ளார்.

இந்திய விக்கெட் காப்பாளர்களிலேயே அதிக வீரர்களை ஆட்டம் இழக்கச் செய்தவர் (294). 2ஆவது இடத்தில் சயத் கிர்மானி (198) உள்ளார்.

இந்திய விக்கெட் காப்பாளர்களிலேயே இரட்டைச் 
சதம் அடித்த ஒரே வீரர் இவர்தான். 2013ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் 224 ஓட்டங்கள் விளாசினார்.

இந்திய அணித்தலைவர்களில் அதிக ஓட்டங்கள் (3,454 ஓட்டங்கள்) குவித்தவரும் இவரே. 2ஆவது இடத்தில் சுனில் கவாஸ்கர் (3449 ஓட்டங்கள்) உள்ளார்.

2009ஆம் ஆண்டில் டோனியின் இந்திய டெஸ்ட் அணி தரவரிசையில் முதலிடம் பிடித்தது. இதுவே இந்திய அணி முதலிடத்தைப் பிடித்த முதல் தருணமாகும்.

No comments:

Post a Comment

Total Pageviews

8,866