தெண்டுல்கர் ஓய்வு பெறுவது இளம் வீரர்களுக்கு உத்வேக இழப்பாகும் என்று முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
தெண்டுல்கர் ஓய்வு
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சச்சின் தெண்டுல்கர் நவம்பர் 14–ந் தேதி முதல் 18–ந் தேதி வரை நடைபெறும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2–வது டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார்.
தெண்டுல்கர் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களுக்கு மட்டுமின்றி அவரது ஆட்டத்தால் ஈர்க்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது. கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் தெண்டுல்கருக்கு, முன்னாள், இன்னாள் வீரர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் புகழாரம் சூட்டி வருகிறார்கள்.
டிராவிட் கருத்து
தெண்டுல்கரின் ஓய்வு குறித்து டிராவிட் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது:–
கிரிக்கெட்டில் இருந்து தெண்டுல்கர் ஓய்வு பெறுவது இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு உத்வேக இழப்பாக இருக்கும். வாழும் ஜாம்பவான் தெண்டுல்கருடன், ஓய்வு அறையை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை இழந்துள்ளனர். இந்திய அணியில் இடம் பிடித்ததில் தெண்டுல்கரை விட நான் 7 ஆண்டுகள் ஜூனியர். ஓய்வு அறையில் தெண்டுல்கருக்கு அடுத்து தங்கள் கிட் பேக்கை வைப்பது பெரிய விஷயமாகும். அத்துடன் இது வீரர்களுக்கு உத்வேகம் அளிப்பதாகும்.
தெண்டுல்கரை ஓய்வு அறையில் பார்ப்பதை அடுத்த தலைமுறை வீரர்கள் இழக்கின்றனர். இது அவர்களுக்கு பெரும் இழப்பாகும். தெண்டுல்கர் ஓய்வு அறையில் இல்லாவிட்டாலும் அவர் விட்டுச் செல்லும் சாதனை வரலாறு நீண்ட நாட்கள் நிலைத்து நிற்கும். அது அடுத்த தலைமுறை வீரர்களுக்கும் தொடரும். சூப்பர் ஸ்டாராக தெண்டுல்கர் இருந்தாலும் அவரை எல்லோரும் எளிதில் அணுகமுடியும். இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு அவர் கனிசமாக பங்களித்து இருக்கிறார். அவரின் நீண்ட கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரும் தருணம் என்பது எனக்கு தெரியும்.
இவ்வாறு டிராவிட் கூறியுள்ளார்.
அசாதாரணமான வீரர்
மத்திய விளையாட்டு மந்திரி ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ள கருத்தில், ‘சச்சின் தெண்டுல்கர் அசாதாரணமான விளையாட்டு வீரர். ஓய்வு பெற்றாலும் அவர் விளையாட்டு வீரர்கள் சாதிக்க உத்வேகம் அளிப்பவராக இருப்பார். தெண்டுல்கருடன் இணைந்து நமது நாட்டு விளையாட்டு வளர்ச்சியில் ஈடுபட மத்திய விளையாட்டு அமைச்சகம் ஆர்வமாக இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
பத்திரிகைகள் பாராட்டு
இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் முன்னணி பத்திரிகைகள் அனைத்து தெண்டுல்கரை வெகுவாக புகழ்ந்து செய்தி வெளியிட்டுள்ளன. அவரை சூப்பர் ஹீரோ என்றும், கால்பந்து ஜாம்பவான் பீலே, பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் ஆகியோருடன் ஒப்பிட்டும் கட்டுரை தீட்டி இருக்கின்றன.
இதேபோல் ஆஸ்திரேலியாவின் முன்னணி பத்திரிகைகள், கிரிக்கெட்டின் கடவுள் என்றும், இந்த காலத்தின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் என்று பாராட்டி செய்திகள் வெளியிட்டுள்ளன.
No comments:
Post a Comment